நாயை ஆட்டும் வால்

வாலாட்டும் நாய் எல்லோருக்கும் தெரியும், ஆனால் அந்த வால் நாயை ஆட்டினால்… தற்போதைய நிதி சந்தையின் நிலைமை இதைப்போலத்தான் உள்ளது. ஒரு சாதாரண வீட்டுக்கடன் சிக்கல் இப்பொழுது உலகையே ஆட்டிக்கொண்டு உள்ளது.
அமெரிக்காவில் தொடங்கிய சிக்கல், மெதுவாக சில ஐரோப்பிய நாடுகளை பாதித்து தற்பொழுது ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்தையும் பாதித்து உள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் நிதி அமைச்சர்களின் அவசர கூட்டத்தில் வங்கிகளில் உள்ள மக்களின் சேமிப்பிற்கு வெறும் 50 ஆயிரம் யுரோ வரை மட்டுமே காப்பு அளிக்க முடியும் என்று அறிவித்து உள்ளனர். நேற்று உலகின் 6 நாடுகளின் தேசிய வங்கிகள் வட்டி விகிதத்தை ஒரு சேர குறைத்து உள்ளன. இதனால் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்று நம்புகின்றனர். அமேரிக்காவில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் 1.65 இலட்சம் மக்கள் வேலை இழந்து உள்ளனர். இதில் நிதி நிறுவங்களை சார்ந்து வேலை செய்த இந்திய மென்பொருள் வல்லுனர்களும் அடக்கம்.
இதற்கு இடையில் ஐஸ்லாந்து நாட்டின் தேசிய வங்கி திவாலாகி, அந்த நாட்டில் பொருளாதாரமே வீழ்ந்து உள்ளது. முதன் முறையாக ஒரு நாடு இந்த பொருளாதார சரிவு சூறாவளியில் திவாலாகி உள்ளது. இங்கு ஒரு சில விடயங்களை நாம் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும், 2007 ம் ஆண்டு உலக வங்கியின் அறிக்கை படி ஐஸ்லாந்து நாட்டின் மக்கள் அமெரிக்காவை விட அதிக வருமானம் ஈட்டுபவர்களாக இருந்து உள்ளனர். சரியாக சொல்ல வேண்டும் என்றால் உலகில் அதிகமாக சம்பாதிக்கும் மக்கள் உள்ள நாடுகளில் அது முதல் பத்து இடங்களுக்குள் இருந்தது. அந்த நாட்டின் மக்களின் சராசரி ஆண்டு வருமான 41 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் . இப்படிப்பட்ட ஒரு நாட்டின் பொருளாதாரமே வீழ்ந்து உள்ளது எனும் போது நம்மில் பலருக்கும் நம் எதிர்காலத்தின் மீது பயத்தையும் பீதியையும் ஏற்படுத்துகின்றது.

இப்படி பல பல பெரிய வங்கிகளும், நிறுவனங்களும் , நாடுகளும் திவாலாகி கொண்டு இருக்கும் போது.. நம்மில் பலருக்கும் இந்த முதலாளித்துவ பொருளாதார அமைப்பு எப்படி இயங்குகிறது என்ற தெளிவு இல்லாமல், கண்ணை கட்டி காட்டில் விட்டவர்களை போல் உள்ளோம். ஆனால் சிலரோ இந்த முதலாளித்துவ அமைப்பின் மீது இன்னும், இவ்வளவு நடந்தும் தீராத நம்பிக்கை கொண்டு , இது மீண்டு வரும் என்று காத்துக்கிடக்கின்றனர் இவர்கள் ஒரு வகையில் பசித்தாலும் புல்லை தின்னாத காகித பணப் புலிகள். இவர்களிடம் இந்த திறந்த சந்தை பொருளாதாரத்தில் வங்கிகள் சோசலிச அரசை விட வேகமாக நாட்டு உடமை ஆக்கப்படுவதை பற்றி கேட்டால் இப்பொழுது நாட்டு உடமை ஆக்கிக்கொள்ளுங்கள் , பிறகு எல்லாம் சரியானவுடம் மீண்டும் தனியாருக்கு கொடுத்து விடலாம்.. மேலோட்டமாக பார்த்தல் இது சரியென்றே தோன்றும்.. அமெரிக்க வங்கிகளின் திவாலனதற்கு அமெரிக்க அரசு 700 பில்லியன் டாலர் நிதி உதவி அளிக்கிறது.. அந்த பணம் யாருடையது… ? அனைத்தும் அமெரிக்க மக்களின் வரிப்பணம்.. ஒரு வங்கி நிறுவனம் தனது முறையற்ற செயல்களால் திவாலாகும் பொழுது மக்களின் வரிப்பணம் அவர்களை காக்க வேண்டும் ஆனால் அதே சமையம் அவர்கள் பல பில்லியன் டாலர்கள் இலாபம் ஈட்டும் பொழுது, அவர்களின் இலாபத்தில் பங்கு கேட்கக் கூடாது.. இழப்பில் மாட்டும் அரசாங்கத்தின் பணம் வேண்டும்.. இலாபமாக இயங்கும் பொழுது அரசாங்கத்தின் தலையீடு கூடாது. இது எந்த வகையில் நியாயம்? பொருளாதாரம் வளர்ந்து கொண்டு இருந்த போது, இதே பொருளாதார வல்லுனர்கள் அமேரிக்காவில் அரசு, நிதி சந்தையில் தலை இடக்கூடாது என்று வாதிட்டு அதை நடைமுறையிலும் செயல்படுத்தினர். ஆனால் இப்பொழுது அவர்களுக்கு நட்டம் எனும் பொழுது அரசு அனைத்து நட்டத்தையும் ஏற்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.. இவர்களின் இந்த போலித்தனம் தான் முதலாளித்துவத்தின் முக்கிய கொள்கை. இப்படிப்பட்ட கொள்கை கொண்ட ஒருவர் தான் ஆலன் பிஷர்மன் எனும் நபர்.

இவர் வாஷிங்க்டன் மியுச்சுவல் (Washingon Mutual — WaMu) என்ற நிதி நிறுவனத்தில் தலைமை நிறுவன அதிகாரியாக (CEO) பணியாற்றியவர்.. இவர் அந்த நிறுவனத்தில் பொறுப்பேற்று வெறும் 17 நாட்களே வேலை செய்தார், சரியாக 18 வது நாள் அந்த நிதி நிறுவனம் திவால் ஆனது. ஆனால் அந்த 17 நாட்கள் வேலை செய்ததற்காக அவருக்கு கொடுக்கப் பட்ட சம்பளம் 20 மில்லியன் டாலர்கள், இதில் அவரின் போனசும் அடக்கம்.. ! இது ஏதோ ஒருவருக்கும் மட்டும் கிடைத்த லாட்டரி பரிசு அல்ல , இவரை போன்று பல நிதி நிறுவன அதிபர்களும் இந்த நெருக்கடி நிலையில் பல மில்லியன் டாலரை சம்பளமாக பெற்று உள்ளனர். வங்கிகளில் உள்ள மக்களின் சேமிப்பு பணத்திற்கு உத்திரவாதம் இல்லை ஆனால் அந்த வங்கி தலைமை அதிகாரிகளுக்கு போனசுடன் சம்பளம்.. !!!

இவர்களின் இன்னொரு முக்கிய வாதம் என்ன வென்றால் 1930 களிலும் இதை போன்ற பொருளாதார சரிவு ஏற்பட்டது என்றும், அதற்கு பின்னும் உலக பொருளாதாரம் மீண்டு வந்து உள்ளது என்பதே. இதைப்பற்றி சிறிது பார்ப்போம் 1929 இல் 5.7 பில்லியன் டாலராக இருத்த அமெரிக்க ஏற்றுமதி 1930 இல் திடீரென 1.7 பில்லியன் டாலராக குறைந்தது, இதனால் உள்ளநாட்டு சந்தையில் பொருட்கள் தேக்கம் அடைந்து பொருட்களின் விலை குறைந்தது. இதனால் இலாபம் என்ற ஒரு குறிக்கோளையே தாரக மந்திரமாக கொன்டுள்ள முதலாளித்துவம் நிலை தடுமாறியது. அந்த கால கட்டத்தில் பல வங்கிகள் திவாலாகின , இது மிகப்பெரும் வேலை இழப்பிற்கும் , பொருளாதார சரிவிற்கும் இட்டு சென்றது. இதைப்பற்றி அமெரிக்க தேசிய வங்கியின் (Federal Reserve) தலைவராக 1934-48 வரை இருந்த மரிநேர் எக்லஸ் தனது புத்தகத்தில் பின்பு இவ்வாறு குறிப்பிட்டார்.. “மக்களின் செல்வம் பரந்து பட்டு உள்ள பொழுது மட்டுமே அந்த நாடு உற்பத்தி செய்யும் பொருட்களை வாங்கும் சக்தி மக்களுக்கு இருக்கும், இப்படி பெரும்பான்மை மக்கள் பொருட்களை வாங்குவதன் மூலமே இந்த பொருளாதாரம் வளர்ச்சி பெரும்.. ஆனால் 1929-30 களில் மக்களிடம் செல்வம் பரந்து பட்ட நிலையில் இல்லாமல் செல்வம் ஒரு சிலரிடம் மட்டுமே குவிந்தது. இப்படி சமசீரற்ற முறையில் செல்வம் மக்களிடம் பரவி இருந்ததே பொருளாதார சரிவிற்கு முக்கிய காரணம்”
இப்படி உலகின் பல, ஏறக்குறைய அனைத்து முதலாளித்துவ நாடுகளும் சரிவில் இருந்த போது, அப்பொழுதைய சோவியத் குடி அரசை இந்த பொருளாதார சரிவால் சிறிதளவும் பாதிக்கப்படவில்லை என்பது மக்கள் பொருளாதாரத்திற்கு கிடைத்த வெற்றி. இந்த பொருளாதார சரிவு அப்பொழுது புதிய சந்தைகளை கைப்பற்றியதன் மூலம் மீண்டு வந்தது, இந்தப் போட்டியும் இரண்டாம் உலகப் போருக்கு காரணமாய் அமைந்தது.
ஆனால் தற்பொழுது பொருளாதாரங்கள் உலக மயத்தால் இணைக்கப்பட்டு உள்ளன. ஒரு நாட்டில் விளையும் சிறு உற்பத்தி பெருக்கமோ அல்லது உற்பத்தி தேக்கமோ உலகின் பல நாடுகளை திவாலகச் செய்யும் நிலைமைக்கு இட்டு செல்கின்றன. முதலாளித்துவம் பெரும்பான்மையான மக்கள் பொருட்களை வாங்குவது/நுகர்வதை அடிப்படையாகக்கொண்டே இயங்குகிறது. இதனால் மக்களின் தேவைக்கு ஏற்ப பொருள் உற்பத்தி என்பது மாறி , இலாபத்திர்க்காகவே பொருள் உற்பத்தி என்ற நிலைக்கு மாற்றப்படுகிறது. இந்த இலாப வெறி உள்ள வரை செல்வம் சிறிது சிறிதாக சிலரிடம் மட்டுமே குவிக்கப்பட்டுகொண்டே இருக்கும். ஒரு கட்டத்திற்கு பிறகு இந்த பொருளாதார கட்டமைப்பு நீர்க்குமிழியை போன்று உடையும்.
இந்த பொருளாதார சரிவில் இருந்து மீண்டு வர இந்த முதலாளித்துவ அமைப்பின் முன்னே உள்ள ஒரே தீர்வு இயற்கை வளங்களை சூறையாடுவதும்… இந்தியா, சீனா போன்ற நாடுகளில் உள்ள மக்களின் நுகர்வை அதிகரிப்பதும்… இந்தியாவிற்கு அணு தொழில் நுட்பத்தை 3 இலட்சம் கோடிகளுக்கு வழங்கியதை போல், பல பல ஒன்றுக்கும் உதவாத தொழில் நுட்பங்கள் இந்தியாவைப்போன்ற நாடுகளின் தலையில் கட்டுவதும்.. இதனால் இருக்கும் கொஞ்ச நஞ்ச இன்பத்தையும், செல்வத்தையும் இழக்கப் போகும் அப்பாவிகள் உழைக்கும் மக்கள் மட்டுமே.
ஆனால் ஏழைக்கும், பணக்காரனக்கும் உள்ள தூரம் முன்பு எப்பொழுதையும் விட மிக விரைவாக அதிகமாகிக் கொண்டே வருகிறது, விரைவில் உழைக்கும் மக்களின் போராட்டம் வெடிக்கும் , அதே சமயம் ஆட்சியாளர்களும் தனது சர்வாதிகாரப் படைகளின் மூலம் அடக்குமுறையை மேற்கொள்வர். பகத் சிங் சொன்னதைப் போல் இந்த போராட்டம் தொடரும்.. ஒரு சோசலிச குடியரசு நிறுவப்படும் வரை தொடந்து கொண்டே இருக்கும்…
அது வரை வால் தெருவின் பேராசைக்கும், ஊழலுக்கும் சிக்கி சீரழிவது மக்களும் அவர்களின் வரிப்பணமும் தான்..
இப்பொழுது சொல்லுங்கள் நாய் வாலாட்டுகிறதா இல்லை வால் நாயை ஆட்டுகிறதா என்று…..

Advertisements

~ by redsickle on October 9, 2008.

One Response to “நாயை ஆட்டும் வால்”

  1. Hmm…. Future looks very dark for sure…

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: