அணு குண்டா ? வேண்டாம்.. மரபணு மாற்றிய சோயா போதும்..

ஒரு நாட்டை அடிமையாக்க முன்பெல்லாம் போரிட்டு அந்த நாட்டை வெல்வது ஒரு வழியாய் இருந்தது.. பின்பு இரண்டாம் உலகப் போருக்கு பின் ஆதிக்க நாடுகள் நாம் அந்த நாட்டில் சென்று கொள்ளை அடிப்பதை விட நம் நாட்டில் இருந்து கொண்டே மாற்ற நாடுகளின் இயற்க்கை வளங்களையும், மனித வளங்களையும் கொள்ளை அடிக்கலாம் என்று வந்தது…அப்பொழுது மக்களிடம் வறுமை இருந்தாலும்.. அரை வயிறு சாப்பிட்டு ஓரளவு நலமுடன் வாழ வழி இருந்தது… ஆனால் அதற்கும் வேட்டு வைத்து விட்டார்கள்  இப்பொழுது  இன்னும் ஒரு படி மேல் போய் உலகமயம், தாராளமயம் என்ற கருத்துக்களால்.. மனிதனின் உணவிற்கும் , ஆயிரம் ஆயிரம் ஆண்டு காலமாக மனிதன் செய்து வரும் இயற்கை விவசாயத்திற்கும் அழிவை நமது இந்திய ஆட்சியாளர்கள் அறிவித்து உள்ளனர்..

GM Food

GM Food, Source : The Hindu

இந்திய வெகு விரைவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுகளை உற்பத்தி மற்றும் இறக்குமதி செய்யப் போகிறது. இதில் என்ன பிரச்சினை என்று யோசிக்கும் அன்பர்களுக்கு சில விபரங்களை அளிக்க விரும்புகிறேன்..

இந்தியாவில் மரபணு மாற்ற உணவு, விதைகள், மாற்ற உயிர்மங்களை கட்டுப்படுத்துவது.. மரபணு தொழில் நுட்ப அனுமதி குழு (Genetic Engineering Approval Committee (GEAC) ). இந்தியாவில் செப்டம்பர் 22, 2006  ஆண்டு விதித்த தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் திருத்தப்பட்ட அனுமதியை மே 8, 2007 அன்று வழங்கியது. அதன்படி விவசாய நிலங்களில் மரபணு மாற்றம் செய்யப் பட்ட பருத்தி, அரிசி, கத்தரி , வெண்டை, உருளை கிழங்கு இன்னும் சில காய் கறிகளுக்கு பயிரிட அனுமதி கிடைத்தது.

இன்று இந்தியாவில் பெரும்பாலும் Bt cotton எனப்படும் பருத்தியை விவசாயிகள் பயிரிடுகின்றனர்..

மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளால் அரசும், அதனை ஆதரிக்கும் மற்றவர்களும் சொல்லும் வாதம் என்னவென்றால்..

1. இதனால் பயிர்களுக்கு நோய் பாதிப்பு குறைவு

2. குறைந்த அளவே பூச்சிகள் இதை தாக்குகின்றன, இதனால் பூச்சி மருந்து செலவும் குறைவு

3. பூச்சி மருந்து செலவு குறைவால், பயிரால் கிடைக்கும் லாபம் அதிகம்

4. இந்த மரபணு மாற்ற விதைகள் அதிக மகசூலை தரக் கூடியவை

இவை எல்லாம் நமக்கு மிகவும் நல்ல விடயமாகப் பட்டாலும்… இதன் உள்ளே இருக்கும் உண்மையை  இந்த அரசு திட்டமிட்டே மறைத்து வருகிறது…

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் மரபணு மாற்ற பருத்தி பயிரடப்படும் விவசாயிகளிடம் நடத்திய ஆய்வில்.. முதலாம் ஆண்டு குறைவான பூச்சி தாக்குதலால் , சிறிது அதிக மகசூல் மற்றும் லாபம் கிடைத்து உள்ளது என்றும்.. ஆனால் அதே சமயம் அதில் பணியாற்றும் விவசாய தொழிளார்களுக்கு தோல் ஒவ்வாமை, மற்றும் பலவித ஒவ்வாமைகள் வந்துள்ளதும் தெரிய வந்தது.

ஒரு சர்வதேச விவசாய அறிவியல் மற்றும் தொழில் நுட்பக் கழகம் (International Assessment of Agricultural Knowledge, Science and Technology for Development -IAASTD Report) நடத்திய ஆய்வில் மரபணு மாற்ற பயிர்களின் மகசூல் சில இடங்களில்  10 -33 % வரை அதிகரித்த அதே வேளையில், மற்றும் சில இடங்களில் அதன் மகசூல் குறைந்தும் இருந்தது. இது மட்டும் அல்லாது மரபணு மாற்ற பயிர்கள் வயல் வெளியில் அருகில் இருக்கும் அதேவகை  மற்ற சாதாரண பயிர்களுடன் மகரந்த சேர்க்கை நடைபெறும் போது.. அது பலவித புதிய பாதகமான  விளைவுகளை ஏற்படுத்துகிறது, இதனால் இது சுற்றுப்புற சூழலுக்கு கேடானது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

உலகில் இந்த மரபணு மாற்ற தொழில் நுட்பத்தில் முதலிடத்தில் இருப்பது மான்சென்டோ என்ற அமெரிக்க நிறுவனம். இந்த நிறுவனம் தான் நம் நாட்டில் இருக்கும்  ஒரு உள்ளூர் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து இந்த தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்ய விளைகிறது. இந்த நிறுவனம் இந்தோனேசியாவில் மரபணு மாற்றிய புதிய பருத்தியை அறிமுகம் செய்த பொழுது இதற்காக செய்யப்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஆய்வை நடத்த வேண்டாம் என்று அந்நாட்டின் மூத்த விவசாய துறை அதிகாரிக்கு கையூட்டு வழங்கியது தெரிய வந்து பெரும் கண்டனத்திற்கு உள்ளானது. மற்றும் ஒரு ஆய்வின் படி கிட்ட தட்ட 140 தற்பொழுதைய மற்றும் முந்தைய இந்தோனேசிய அரசு அதிகாரிகளுக்கு இந்த நிறுவனம் கையூட்டு அழிந்து உள்ளதும் அம்பலம் ஆகி உள்ளது.இதற்காக இந்த நிறுவனத்திற்கு 1.5 மில்லியன் டாலர் அபராதமும் விதிக்கப் பட்டது…

உலகில் 90% மரபணு தொழில் நுட்பத்தை கட்டுப்படுத்தும் இந்தைகைய நிறுவனம் எதற்காக சுற்றுச்சூழல் ஆய்வை தவிர்க்க கையூட்டு வழங்க வேண்டும்… ?

இந்தியாவில் நானாபடேகர் என்ற வட இந்திய நடிகர், 2005 ம் ஆண்டு  மான்சென்டோ நிறுவனத்தின் பி.டி. பருத்தி விதைக்கு ஆதரவு வழங்கி விவசாயிகளிடம் பிரச்சாரம் செய்தார்.. ஆனால் அடுத்த ஆண்டு இதற்கான ஆதரவை திரும்ப பெற்றார்.. அதற்காக சொல்லப்பட்ட காரணங்கள் இரண்டு..

1. இந்த பருத்தி விளைச்சலால் விவசாயிகளுக்கு ஏற்ப்பட்ட நட்டம்

2. இந்த நட்டதால் ஏற்பட்ட விவசாயிகளின் தற்கொலைகள்.

இன்று இந்தியாவில் பி.டி பருத்தி மட்டுமே, அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்பட்டு பயிரிடப்படுகிறது, தற்பொழுது இந்திய அரசு பி.டி.கத்தரிக்காயை அறிமுகம் செய்ய முயற்சி செய்து வருகிறது.

இந்த பி.டி பருத்தி , பருத்திகளை தாக்கும் அமெரிக்க புல்வோர்ம் என்ற பூச்சிக்கு எதிராக உருவாக்கப் பட்டது. இந்த புல்வோர்ம் பூச்சியை கொள்ளும் நஞ்சை நேரடியாக பருத்தியின் மரபணுவில் மாற்றம் செய்வதால், இந்த பூச்சி பருத்தியை தாக்காது, இதனால் மகசூல் அதிகரிக்கும், லாபம் அதிகரிக்கும், இவைதான் இந்த பி.டி பருத்தி அறிமுகமானபோது (2004 ம் ஆண்டு ) மான்சாண்டோ நிறுவனத்தால் சொல்லப்பட்ட முக்கிய கருத்துக்கள். இன்று ஒரு சில ஆண்டுகளில் பருத்தியை தாக்கும் புல்வோர்ம் பூச்சி , பி.டி பருத்தியின் நச்சுத்தன்மைக்கு எதிராக எதிர்ப்பு சக்தி பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.. இதனால் இன்று விவசாயிகள் மீண்டும் பலவித பூச்சிகொல்லி மருந்துகளை உபயோக்கின்றனர்.
சமீபத்தில் நவதான்யா எனும் அமைப்பு விதர்பா நகரத்தில் நடத்திய ஆய்வில்.. பி.டி. பருத்தி விளைச்சல் செய்த நிலத்தில் மூன்று ஆண்டுகளில் மண்ணிற்கு நன்மை செய்யும் முக்கிய நுண்ணுயிர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்தது தெரியவந்தது. வேறு வார்த்தைகளில் கூறுவது என்றால் விவசாய நிலத்தில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்துகிறது. இதனை தவிர்த்து பி.டி.பருத்தி பூக்களை சுவைத்த பட்டாம் பூச்சிகளின் மரணம், பல புதிய வகை பூச்சிகளின் தாக்குதல் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த அமைப்பின் கருத்துக்கணிப்பின்படி 2004 ம் ஆண்டில் இருந்து இன்றுவரை விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை  உயர்ந்து உள்ளதாக கூறுகிறது. இதற்க்கு  பருத்தியின் விலை சரிவும் ஒரு காரணம் என்றாலும், பி.டி பருத்தியும் ஒரு முக்கிய காரணம் என்பதை இந்த அமைப்பின் அறிக்கை உறுதியுடன் கூறகிறது.

பி.டி பருத்தியின் விளைவுகள் இவை என்றால், பி.டி. மக்கா சோளத்தின் விளைவுகள் இதனைவிட மோசமாக உள்ளன. மரபணு தொழில் நுட்ப அனுமதி குழு (Genetic Engineering Approval Committee (GEAC) ) கொடுத்த அனுமதியின் படி இந்தியாவில் உள்ள சில விவசாய பல்கலை கழகங்களில் பி.டி மக்கா சோளம் ஆய்வுக்காக பயிரிடப்பட்டு வருகிறது. ஆஸ்திரிய விஞ்ஞானிகள் 30 சதவீத  பி.டி சோளத்தை 7௦ சதவீத இயற்கை சொலதுடன் கலந்து சில எலிகளுக்கும், வெறும் இயற்கை சோளத்தை வேறு சில எலிகளுக்கும் உணவாக கொடுத்து  நடத்திய ஆய்வில், பி.டி.சோளத்தை உணவாக கொண்ட எலிகள் , குறைந்த அளவு எலிகளை ஈன்று எடுத்தும், அந்த எலி குட்டிகள் சாதாரண  எலிகளின் குட்டிகளை விட அளவில் சிறியவையாக இருந்தும் தெரியவந்தது.
ரசிய விஞ்ஞானிகள் பி.டி. சோயா பாலை , எலிகளுக்கு உணவாக அளித்து நடத்திய  மற்றொரு ஆய்வில் புதிதாய் பிறந்த எலிகுட்டிகளில் பாதிக்கும் மேற்பட்டவை முதல் மூன்று வாரங்களுக்குள் இறந்ததும், ஆறு மடங்கு அதிக எலிகள் மிகவும்  அதிகமாக  எடை குறைவாக இருந்தும் கண்டு அறியப்பட்டு உள்ளது. இதேபோல் இத்தாலிய விஞ்ஞானிகளின் ஆய்வின் படி பி.டி சோயா எலிகளின் கல்லீரலை பாதிப்பதையும் உறுதி படுத்தி உள்ளனர்.

புவியின் தட்ப வெட்ப நிலை, பருவ காலங்கள் பல்வேறு காரணிகளால் வேகமாக மாறுபட்டு கொண்டு இருக்கும் சூழலில், உணவு உற்பத்தியில் இயற்கையோடு இணைந்த புதிய தொழில்நுட்பங்களின் தேவையும் அதிகரித்து வரிகிறது. இந்த தேவையை தனது லாப வெறிக்காக பயன்படுத்தி கொள்ள, பல பன்னாட்டு நிறுவனங்கள் முயன்று வருகின்றன. மனிதன் பல நூறு ஆண்டுகளாக இயற்கையோடு இணைந்து, விவசாயம் செய்து தனது உணவு தேவையை எந்த வித பாதிப்புகளும் இல்லாமல் பூர்த்தி செய்து வந்துள்ளான், ஆனால் கடந்த சில பத்து ஆண்டுகளில் ஒரு சில நிறுவனகளின் லாப வேட்டைக்காக இயற்க்கை விவசாயம் அளிக்கப்பட்டு, மண்ணை நஞ்சாக்கும் பூச்சிக் கொல்லிகளும், செயற்கை உரங்களும் அறிமுகப்படுத்தப் பட்டு அதன் விளைவுகளை நாம் இன்று உணர ஆரம்பித்து வருகிறோம். இப்படிப்பட்ட நிலையில் மனிதனால் செயற்கையாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு பொருட்கள் நம் மீது, நமது சூழலின் மீது பல தாக்கங்களை ஏற்படுத்தும்.
சுற்றுச் சூழலையும், மனிதனியும் அழிக்க வெறும் ஆயதங்கள் மட்டும் அல்ல,  உணவுகளும் இப்போதெல்லாம் பயன்படுகின்றன. விழிப்புடன் இருப்போம், மக்களை விழிப்படைய செய்வோம், உணவில் பன்னாட்டு நிறுவனகளின் ஆதிக்கத்தை முறியடிப்போம்.

மேலதிக விவரங்களுக்கு..

Who Benefits from GM Crops

Navadanya

~ by redsickle on August 26, 2009.

Leave a comment